மா விவசாயிகளுக்கு மானியம் வழங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
தேனி: ஆந்திர மாநிலம் சித்துாரில் மா விவசாயிகளுக்கு மானியம் வழங்கவது போல் தமிழகத்திலும் மானியம் வழங்க வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.மாவட்டத்தில் பெரியகுளம், போடி, தேனி பகுதிகளில் சுமார் 9ஆயிரம் எக்டேருக்கு மேல் மா விவசாயம் செய்ப்படுகிறது. ஆனால், இந்தாண்டு மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் மா விவசாயிகளுடன் அதிகாரிகள் தேனி வேளாண் விற்பனை குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், பாண்டியன், விவசாயிகள் மூக்கையா, முத்துவேல் பாண்டியன், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவாயிகள் கூறுகையில், 'விலை ஆதரவு திட்டத்தில் மாங்காய், மாம்பழத்திற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். மாம்பழ கூல் தயாரிப்பு நிறுவனங்கள் ரசாயனங்கள் பயன்படுத்தி ஜூஸ் தயாரிப்பதால் மா கொள்முதல் குறைந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். ஆந்திரா சித்துார் மாவட்டத்தில் வழங்குவது போல் தமிழக மா விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் மாம்பழக் கூல் ஆலைகள் திறக்க வேண்டும். மரத்திற்கு பயன்படுத்தும் சில மருந்துகளை தடை செய்ய வேண்டும், என்றனர்.விரைவில் முத்தரப்பு கூட்டம்வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' விவசாயிகளின் கோரிக்கை கலெக்டர் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் கொண்ட முத்தரப்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும். அதில் மாம்பழ கூல் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.