இடுக்கியில் சுகாதார திட்டங்கள் அமைச்சர் துவக்கி வைப்பு
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார திட்டங்களை அமைச்சர் வீணாஜார்ஜ் துவக்கி வைத்தார்.இடுக்கி மாவட்டத்தில் பைனாவ்வில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது.அங்கு ரூ.92 கோடி செலவில் மாணவர், மாணவியர் தங்கும் விடுதிகள், பணியாளர் குடியிருப்பு, ஆய்வகம், விரிவுரை கூடம் ஆகியவை கட்டப்பட்டு, பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. அதேபோல் ஏலப்பாறை குடும்ப சுகாதார மையத்தில் ரூ.1.34 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.மூணாறு அருகே அடிமாலி தாலுகா மருத்துவமனையில் ரூ.3.6 கோடி செலவில் பத்து படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் யூனிட் அமைக்கப்பட்டது.அவை அனைத்தையும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணாஜார்ஜ், அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று திட்டங்களை துவக்கி வைத்தார். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா தலைமை வகித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது., தமிழக எல்லைகள் முதல் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிழக்கு பகுதி வரை பரந்து கிடக்கும் தேவிகுளம் தாலுகாவில் வசிக்கும் மக்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். அதற்கு தீர்வு காணும் வகையில் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட் துவங்கப்பட்டது. ரூ.1.5 கோடி செலவில் ஐந்து டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. தேவையான அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு யூனிட்டின் செயல்பாடு உறுதிபடுத்தப்படும், என்றார்.