இடுக்கியில் பருவ மழை அதிகரிப்பு மூணாறில் 54.4 செ.மீ., மழை அதிகம்
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை கடந்தாண்டை விட 865.34 மி.மீ., அதிகம் பெய்ததாக தெரிய வந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப். இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மே 24ல் துவங்கியது. எனினும் மழை காலண்டர் அட்டவணைபடி பருவ மழை ஜூன் முதல் செப். இறுதி வரை பதிவு செய்யப்படும். அதன்படி அந்த கால அளவில் இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை 3265.11 மி.மீ., பெய்தது. இதே கால அளவில் கடந்தாண்டு 2399.77 மி.மீ., மழை பதிவானது. கடந்தாண்டை விட 865.34 மி.மீ., மழை அதிகமாகும். இம் மாவட்டத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் பருவ மழை கொட்டித்தீர்த்தது. கடந்தாண்டு ஜூன் 1 முதல் செப்.30 வரை 322.71 செ.மீ., மழை பதிவானது. இதே கால அளவில் இந்தாண்டு 377.11 செ.மீ., மழை பெய்தது. இது கடந்தாண்டை விட 54.4 செ.மீ., அதிகமாகும். இந்தாண்டு பருவ மழை மிகவும் கூடுதலாக ஜூலை 26ல் 21.32 செ.மீ., பதிவானது. அதேபோல் கடந்தாண்டு ஜன.1 முதல் அக்.31 வரை 401.90 செ.மீ., மழை பெய்த நிலையில், இதே கால அளவில் இந்தாண்டு 537.46 செ.மீ., மழை பதிவானது. இது கடந்தாண்டை விட 135.56 செ.மீ., அதிகமாகும். இந்தாண்டு மே இறுதியில் பருவ மழை துவங்கியதால், அம்மாதம் மழை அதிகம் பதிவானது. கடந்தாண்டு மே மாதம் 30.18 செ.மீ., மழை பெய்த நிலையில், இந்தாண்டு மே மாதம் 117.75 செ.மீ., மழை பதிவானது. இது கடந்தாண்டை விட 87.57 செ.மீ., அதிக மாகும்.