பருவமழையால் கறவை மாடுகளுக்கு இயற்கை தீவனம் தாராளம்: பால் சுரப்பு அதிகரிப்பால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு அடுத்தபடியாக கறவை மாடுகள், காளை மாடுகள் வளர்ப்பு முக்கிய இடம் பிடித்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டிபட்டி பகுதியில் நிலவிய வறட்சியால் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். தீவனம் கொடுத்து கறவை மாடுகளை பராமரிக்க முடியாமல் பலரும் குறைந்த விலைக்கு விற்றனர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பருவ மழை கை கொடுத்துள்ளதால் ஆண்டிபட்டி பகுதியில் இயற்கை தீவனத்தில் தன்னிறைவு கிடைத்துள்ளது. இயற்கை தீவனத்தால் கறவை மாடுகளின் பால் சுரப்பும் அதிகரித்துள்ளது. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பவர்கள், கறவை மாடு வியாபாரிகளுக்கு தொழிலில் ஆர்வம் அதிகரித்துள்ளது.கறவை மாடுகள் வியாபாரிகள் கூறியதாவது:ஆண்டிபட்டி பகுதியில் சிந்து செவலை, ஜெர்சி, கிர், கரும்போர் வகையைச் சேர்ந்த கறவை மாடுகள் அதிகம் உள்ளன. இந்த வகை மாடுகள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. 10 லிட்டர் பால் தரும் கறவை மாடுகள் ரூ.50 ஆயிரம், 15 லிட்டர் பால் தரும் கறவை மாடுகள் ரூ.60 ஆயிரம் வரை விலை உள்ளது. நாட்டு மாடுகளை கரூர், காங்கேயம் பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இவைகள் 5 லிட்டர் வரை பால் தரும். தற்போது பெய்துள்ள மழை, கிணறுகளில்நீர் இருப்பால் தீவனப்புல் அதிகம் விளைகிறது. மேய்ச்சல் நிலங்களில் கிடைக்கும் தீவனத்தாலும், தீவனப்புல் கொடுப்பதாலும் கறவை மாடுகளுக்கு வயிறு நிறையும். சத்துக் குறைவு ஏற்படாது. கிடை மாடுகள் குறைவான அளவில் பால் தந்தாலும், அதில் சத்துக்கள் அதிகம். விவசாய நிலங்களில் உரத் தேவைக்காக இதன் வளர்ப்பை தொடர்கின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் தற்போது நிலவும் இயற்கை சூழல் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றனர்.