இருளில் மூழ்கிய மலைக் கிராமங்கள்
போடி: போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகமலை, வடக்கு மலை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராம குடியிருப்புகளுக்கு மின் வசதி இல்லாததால், இருளில் மூழ்கிய நிலையில் மலைக்கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி ஒன்றியம், வடக்கு மலை, அத்தியூத்து, இலங்காவரிசை, அண்ணாநகர், பிச்சாங்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 2500 விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ரோடு வசதி இல்லை. அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் வசதி இன்றி இரவில் அரிக்கேன் விளக்கை பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகளில் வசிக்கும் சிலருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கி சோலார் விளக்கிற்கு பேட்டரி, மின் சாதனங்கள் பழுதடைந்து பயனற்று உள்ளன. பல குடும்பங்களுக்கு இன்னும் சோலார் விளக்குகள் வழங்கவில்லை. இதனால் இரவில் மலைக்கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.பழுதடைந்த சோலார் விளக்குகளை பழுது நீக்கம் செய்தும், மானிய விலையில் மரபு சாரா எரித்துறை மூலம் உதிரி பாகங்கள் வழங்கவும், சோலார் விளக்கு வசதி ஏற்படுத்தி தர மலைக்கிராம மக்கள் போடி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மலைக் கிராம மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.