உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க புதிய முயற்சி; பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்க முடிவு

மா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க புதிய முயற்சி; பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்க முடிவு

தேனி மாவட்டத்தில் 9600 எக்டேரில் மா சாகுபடி ஆகிறது. மாவட்டத்தில் பங்கனப்பள்ளி, பெங்களூரா, நீலம், அல்போன்சா, இமாம்பசந்த், செந்துாரம் ரகங்கள் சாகுபடி ஆகிறது. மா மரங்களில் டிசம்பரில் பூக்கள் பூத்து, மார்ச் இறுதியில் காய்கள் காய்க்க துவங்குகின்றன. ஏப்ரல், மே, ஜூனில் காய்கள் அறுவடையாகின்றன. கடந்தாண்டு மா உற்பத்தி சரிந்து நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் அறுவடைக்கான புதிய ரகங்கள் கண்டறிய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்க வில்லை. செலவான தொகை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் குமுறினர். சில ரகங்கள் கிலோ ரூ.5க்கும் விற்பனையாகின. இதனால் அரசு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து, போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் மா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க தோட்டக்கலைத்துறை புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. துறை அதிகாரிகள் கூறியதாவது: நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைத்தல், நீர் பாய்ச்சுதல், பராமரித்தல் பயிற்சிகள் நேரடியாக தோட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர மாம்பழங்களில் இருந்து கூல், ஜாம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மா விவசாயிகளுக்கு சீரான விலை கிடைக்கும். இதற்காக ஒரு தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழுவில் தோட்டக்கலைக் கல்லுாரி பேராசிரியர், விஞ்ஞானிகள், வேளாண் பொறியியல், வணிகத்துறை அதிகாரிகளும் இடம் பெறுவர். பெரியகுளம் வட்டாரத்தில் இந்த குழு மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை