மேலும் செய்திகள்
பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை
19-Jan-2025
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி வேலை பூஜைக்கு தர ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.சக்கம்பட்டி ஓம் சரவணபவ முருகா சேவா டிரஸ்ட் மற்றும் தைப்பூச பழநி பாதயாத்திரை குழுவினர் பல ஆண்டுகளாக தைப்பூசத்திற்காக பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். பக்தர்கள் சார்பில் 2016ல் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் செய்து சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வெள்ளி வேலை தங்களுடன் பூஜை செய்ய பழநிக்கு கொண்டு சென்று, விழா முடிந்த பின் மீண்டும் கோயிலில் ஒப்படைப்பர். சக்கம்பட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் முத்துமாரியம்மன் கோயில் தற்போது ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வழக்கம்போல் நேற்று முன்தினம் பாதயாத்திரை பக்தர்கள் வேலை பழநி கொண்டு சென்று பூஜை செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். வேல் வழங்க சம்மதித்த அதிகாரிகள் ஒப்படைப்புக்கான கையெழுத்தும் 3 நாட்களுக்கு முன் பெற்றுள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை கிளம்பும் நேரத்தில் வேல் வழங்க மறுத்து செயல்அலுவலர் கோயிலை பூட்டி சென்றார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பக்தர்கள் வேல் கேட்டு வந்தனர். வேல் கிடைக்காததால், தங்களிடம் பெற்ற ஒப்புதல் கடிதத்தை கேட்டு பிரச்னை செய்தனர். இதில் பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இரவு 11:00 மணிவரை காத்திருந்த பக்தர்கள் வேல் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பாதயாத்திரை புறப்பட்டனர்.இதுகுறித்து விளக்கம் கேட்க கோயில் செயல் அலுவலர் சுந்தரி, உதவி ஆணையரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அழைப்புகளை ஏற்கவில்லை.
19-Jan-2025