கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகள் தயக்கம்
கம்பம்: கம்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முதல் போக நெல் சாகுபடியில் கம்பம் பகுதியில் அறுவடை துவங்கியுள்ளது. எனவே,நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக வேளாண் துறையினர், நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளனர். கம்பம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வர மறுக்கின்றனர். கடந்தாண்டு இரண்டு போகங்களிலும் கொள் முதல் நிலையம் திறந்தும் ஒரு கிலோ கூட கொள்முதல் செய்யவில்லை. எனவே தற்போது திறப்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் கருத்து குறித்து கம்பம் விவசாய சங்க செயலாளர் சுகு மாறன் கூறுகையில், தவறான தகவலை கூறுகின்றனர். கடந்தாண்டு நானே நெல் கொண்டு சென்று, திரும்ப எடுத்து வந்தேன். அறுவடை துவங்கும் போதே கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அதிகாரிகள் அறுவடை துவங்கி ஒரு மாதத்திற்கு பின் திறந்தால் எப்படி கொள்முதல் செய்ய முடியும். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார்.