தேர்தல் பயிற்சி பெற தொகுதிக்கு ஒரு அலுவலர் வீதம் டில்லி பயணம்
தேனி:வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பயிற்சிக்காக தொகுதிக்கு ஒரு கண்காணிப்பளர் வீதம் தமிழகம் முழுவதும் இருந்து 234 அலுவலர்கள் டில்லி செல்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தேர்தல் களப்பணியில் பி.எல்.ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி அலுவலர்கள்) முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களுக்கு சில தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 10 பி.எல்.ஓ,க்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் உள்ளனர். அவர்களில் தமிழகத்தில் தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேரை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு டில்லி துவாரகாவில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மே 7,8 ல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இதற்கு செல்வோருக்காக ரயில்களில் தனி ஏ.சி., பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று, நாளை மதுரை, கோவை, நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து டில்லி புறப்படுகின்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் கண்காணிப்பாளர்களுக்கு டில்லியில் பயிற்சி வழங்குவது இது முதன் முறையாகும். பயிற்சி தமிழில் வழங்கப்பட உள்ளது. பின்னர் இவர்கள் தொகுதியில் மற்ற கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவர்'என்றார்.