மந்தைகுளம் கண்மாய் கரையில் கல்பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு
தேனி: அல்லிநகரம் மந்தை குளம் கண்மாயில் நீர்வளத்துறை சார்பில் கண்மாய் கரையில் கல்பதிக்கும் பணிக்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக் கோயில் செல்லும் ரோட்டில் மந்தைகுளம் கண்மாய் அமைந்தள்ளது. நேற்று நீர்வளத்துறை சார்பில் கரைகளை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. சுத்தப்படுத்தும் பணியின் போது கரையில் இருந்த மண் திட்டுக்களை கண்மாய் உட்பகுதியில் மண்அள்ளும் இயந்திரம் மூலம் தள்ளினர். இதனால் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி குறையும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி நீர்வளத்துறையினர் கூறுகையில், 'கரைகளை பலப்படுத்த ஒருபுறம் 500 மீ., நீளத்திற்கு கரையின் பக்கவாட்டில் கற்கள் பதிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரையின் பக்கவாட்டில் உள்ள மேடு பள்ளங்களை சமம் செய்கிறோம். கரையை ஆக்கிரமித்து 88 வீடுகள் உள்ளன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து வருகிறோம். வேறு இடத்தில் வீடு வழங்கிய பின் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்றனர். தனிநபருக்காக பணி ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகி, ஹிந்து எழுச்சி முன்னணி, தேனி. குளத்தை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் தனிநபர் ஆக்கிரமித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆக்கிரமிப்பபு உள்ளதா என ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாய் உள்ள பகுதியில் மண்ணை தள்ளி நீர்பிடிப்புபரப்பை குறைப்பதை கண்டிக்கிறோம் என்றார்.