மூணாறு குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா
மூணாறு: மூணாறு அருகே படையப்பா ஆண் காட்டு யானை பகலில் குடியிருப்பு பகுதியில் நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை கடந்த மூன்று நாட்களாக தேவிகுளம் எஸ்டேட் ஓ.டி.கே., டிவிஷன் பகுதியில் முகாமிட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு குடியிருப்பு பகுதியில் படையப்பா நடமாடியது.ஆரம்ப காலங்களில் தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்கள் ஆடி மாதம் துவக்க நாட்களில் கன மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பு கருதி தொழிலாளர்களுக்கு 1, 2 ஆகிய தேதிகளில் ஊதியத்துடன் விடுமுறை அளித்தனர். அந்த வழக்கம் தற்போது வரை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் விடுப்பில் இருந்தனர். நேற்று முன்தினம் படையப்பா குடியிருப்பு பகுதியில் நடமாடியபோது தொழிலாளர்கள் வீடுகளில் இருந்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் அப்பகுதியில் படையப்பா முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.