தடுப்பணை கரை உடைந்ததால் நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்
போடி: உப்பார்பட்டி அணை மேற்கு பகுதி பக்கவாட்டு தடுப்பு மண் கரை உடைந்தால் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. போடி பகுதியில் பெய்யும் தொடர் கனமழை, முல்லைப் பெரியாறு நீர் திறந்து விடப்பட்டதால் முல்லை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் முல்லை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வருகிறது. இந் நிலையில் உப்புக்கோட்டை, பாலார்பட்டி கூழையனூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் வெள்ளம் உப்பார்பட்டி அணையின் மேற்கு பக்கவாட்டு தடுப்பு மண்கரை உடைந்தது. இதனால் வெள்ளம் வயல்களுக்குள் புகுந்து நெல்பயிர் நீரில் மூழ்கின. தற்போது ஏற்பட்ட அணை உடைப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிடாததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். அணை உடைப்பிற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் சீரமைத்திட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.