மண் கடத்தலால் பனை மரங்கள் பாதிப்பு
போடி: போடி சிலமலை செல்லும் பைபாஸ் ரோட்டில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க மண் அரிப்பை தடுத்து, மண் அணைப்பு ஏற்படுத்திட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.போடியில் இருந்து தேவாரம் செல்லும் ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனை தவிர்க்க 15 ஆண்டுகளுக்கு முன்பு போடி ரங்கநாதபுரத்தில் இருந்து ராணி மங்கம்மாள் சாலை வழியாக சிலமலை வரை 4 கி.மீ., தூரம் 50 அடி அகலத்தில் ரோடு, பாலங்கள் அமைக்கப்பட்டன.இந்நிலையில் ரோட்டின் இருபுறமும் மண் அள்ளி கடத்தல், மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்களாக மாறி உள்ளன. இதனால் ரோட்டோரம் உள்ள 200 க்கும் மேற்பட்ட பனை மரங்களின் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, விழும் நிலையில் உள்ளது.தற்போது காற்று காலம் துவங்க உள்ள நிலையில் பனை மரங்களை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுத்து, மரங்கள் சுற்றி மண் அணைப்பு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.