தேர்தல் பணிக்கு துணை ராணுவப் படை வருகை
தேனி: சட்டசபை தேர்தல் பணிக்காக தெலுங்கானாவில் இருந்து மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் 58 பேர் மாவட்டத்திற்கு வருகை தந்து நேற்று தேனியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக தெலுங்கானாவில் இருந்து மத்திய துணை ராணுவப்படையினர் 58 பேர் வந்தனர். நேற்று துணை ராணுவப்படையினருடன் தேனி எஸ்.பி. சினேகப்ரியா ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்தும், வாக்காளர்கள் குறித்தும் விளக்கினர். உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் பணி செய்வது பற்றி அறிவுறுத்தப்பட்டது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பற்றி துணை ராணுவப்படையினரிடம் விளக்கப் பட்டது. நேற்று மாலை அல்லிநகரம் பிள்ளையார் கோயிலில் முதல் தேனி பங்களாமேடுவரை மத்திய துணை ராணுவப் படை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலையில் தேனி மதுரை ரோட்டில் ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் எஸ்.பி. சினேகப்ரியா, துணை ராணுவப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.