இரட்டை கொலை வழக்கில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல் கல்லுாரி மாணவரின் பெற்றோர் டி.ஆர்.ஓ.,விடம் மனு
தேனி: தேனி சுருளி அருவி அருகே நடந்த இரட்டை கொலையில் கட்டவெள்ளை என்பவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இறந்த மாணவரின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். தேனி கோட்டூர் தங்கநதி குடும்பத்தினர் அளித்த மனுவில், ' எனது மகன் எழில்முதல்வன் அவனுடன் கல்லுாரி மாணவி கஸ்துாரி இருவரும் சுருளி அருவி அருகே 2011ல் கொலை செய்யப்பட்டனர். இதில் மாணவி வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் கட்டவெள்ளை என்பவரை கைது செய்து தேனி மாவட்ட நீதிமன்றம் துாக்கு தண்டனை, இரட்டை ஆயுள், 7 ஆண்டு கடுங்காவல் வழங்கியது. கட்டவெள்ளை மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் இத்தண்டனைகளை உறுதி செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் இந்த தண்டனைகளை தள்ளுபடி செய்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம். தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கட்டவெள்ளைக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்,' என கோரி இருந்தனர். தேனியை சேர்ந்த ரிஷப் என்பவர் வழங்கிய மனுவில் தேனி நகர்பகுதியில் மரங்களின் மீது தனியார் நிறுவனங்கள் ஆணி அடிக்கின்றனர். இதனை கண்டு கொள்ளாத நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திருந்தார். அரண்மனைப்புதுார் ரிடோ அமைப்பு நிர்வாகி ஈஸ்வரன் மனுவில், குன்னுார் செங்குளம், கருங்குளம் கரை பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த 25 பனைமரங்கள், 4 வேம்பு, கடம்பு, இலுப்பை மரங்கன்றுகளை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். தீக்குளிக்க முயற்சி ஆண்டிபட்டி தாலுகா ஏத்தகோவில் மாரியம்மாள்,கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். தீடீரென அவர் கொண்டு வந்த பையில் இருந்து மண்ணெண்ணை பாட்டிலை எடுத்தார். அதனை பார்த்த போலீசார் பாட்டிலை கைப்பற்றினர். அவருக்கு அறிவுரை கூறி மனு அளிக்க அனுப்பி வைத்தனர். நிலப்பிரச்னை தொடர்பாக தீர்வு கோரி தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். சிவா எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட நாடார்களின் கூட்டமைப்பு சார்பில் காமராஜர் பற்றி தவறாக பேசி தி.மு.க.,வைச் சேர்ந்த சிவா எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோஜி தலைமை வகித்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு, உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களை புறக்கணிக்க உள்ளதாக வினோஜி தெரிவித்தார்.