மாவட்டத்தில் பராமரிக்காத அரசு பஸ்களால் பயணிகள் அவதி; தொழிலாளர்கள், பயணிகள் காயம் அடையும் பரிதாபம்
போடி: தேனி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் இருக்கைகள் சேதமடைந்து பயணிகள் காயப்படுகின்றனர். இதனால் பயணிகள் அரசு பஸ்களில் பயணிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் அமைந்து உள்ளது. போடியில் இருந்து சிலமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், சின்னமனூர், தேவாரம் உட்பட கிராமம் மார்க்கமாக 23 பஸ்களும், தேனி, திண்டுக்கல். மதுரை, திருச்சி உட்பட 46 பஸ்களும், போடியில் இருந்து தேனி மார்க்கமாக செல்கின்றன. இது போல தேனி, பெரியகுளம், தேவாரம், கம்பம், லோயர் கேம்ப் பகுதி அரசு பஸ் டெப்போக்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மாவட்டம் முழுவதும் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ் 117, தொலை தூர பஸ்கள் 272 மொத்தம் 389 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிதாக போடிக்கு 13, தேவாரம் 4 என மாவட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வந்துள்ளன.பஸ் டெப்போக்கில் பஸ்களை சுத்தம் செய்ய தற்காலிக கிளீனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பஸ்களின் தேவைக்கு ஏற்ப கிளீனர்கள் இல்லாததால் புதிய பஸ்கள் மட்டும் சுத்தம் செய்கின்றனர். மற்ற பஸ்களை சுத்தம் செய்வது இல்லை. டெப்போக்கில் 3 முதல் 5 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு சம்பளமும் குறைவாக வழங்குவதால் அதிகளவில் பஸ்களை சுத்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.இதனால் அரசு பஸ்களில் குப்பை, துாசி, மண் என பஸ்சிற்குள் படிந்துள்ளது. பஸ்களில் பயணிகள் சிலர் வாந்தி எடுத்து இருப்பதை கூட சுத்தம் செய்வது இல்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.பெரும்பாலான பஸ்களில் பயணிகள் இருக்கை சேதம் அடைந்தும், சீட் கவர்கள் கிழிந்தும், பக்கவாட்டு கம்பிகள், தகடுகள் வெளியே நீட்டியபடி உள்ளதால் பயணிகளை காயம் ஏற்படுத்தி பதம் பார்க்கிறது. சேதம் அடைந்த பஸ்கள் ரோட்டில் செல்லும் போது தட .... தட லோட...லொட ..வென சத்தத்துடன் பயணிக்கிறது.பல பஸ்களில் டிரைவர்கள் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் கிடு,கிடுவென ஆடும் நிலையிகல் டிரைவர்கள் சீட் மோசமாக உள்ளது. இதில்தான் அமர்ந்து பஸ்களை இயக்க வேண்டிய அவலமும் தொடர்கிறது.அரசு பஸ்களை தினமும் சுத்தம் செய்வதுடன் சேதம் அடைந்த பாகங்களை சீரமைத்து இயக்கிட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.