உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்

போடி; முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு, போடி அருகே பாலார்பட்டி கிராமத்து பெண்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டனர்.இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை சூட்டி தங்களது வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடனை செலுத்தி, விழா கொண்டாடி வருகின்றனர். பென்னிகுவிக் 1841ல் ஜன.15ல் பிறந்தார். போடி அருகே பாலார்பட்டி கிராம மக்கள் தமிழர் இன திருவிழாவாக, தைத்திருநாள் பொங்கல் விழாவை பென்னிகுவிக்கிற்கு நினைவு பொங்கல் விழாவாக, அவரை வழிபடுவதை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.நேற்று காலை பாலார்பட்டியில் கர்னல் பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி தலைமையில் தேவராட்டம், சிலம்பாட்டத்துடனும், பெண்கள், மலேசியா சுற்றுலாப் பயணிகள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக பென்னிகுவிக் நினைவு மண்டபம் வரை சென்றனர். அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து, நெற்கதிர்கள், பொங்கல், வாழைப்பழம், தேங்காய் உடைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம், 18 ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், கேரளா ராஜகுமாரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவி, மலேசியா சுற்றுலாப் பயணிகள் எக்லஸ், நிமிலி, தாரணி, உத்தமபாளையம் ஹாஜி கர்த்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர், சபானா பர்வீன் உட்பட விவசாயிகள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.கர்னல் பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி கூறியதாவது: ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை பல சோதனைகளை கடந்து பென்னிகுவிக் கட்டினார். இந்த பகுதி மட்டும் இன்றி 5 மாவட்டங்களும், ஆண்டு முழுவதும் வறட்சியாக இருந்திருக்கும். அவரது பிறந்த நாளான தைத்திருநாளில் நாங்கள் வணங்கும் மனித கடவுளாக போற்றி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை