சேதமடைந்த குழாயில் கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம் பெரியகுளம் நகராட்சி 16 வது வார்டு மக்கள் புலம்பல்
பெரியகுளம் : சாக்கடையை ஒட்டி செல்லும் குடிநீர் குழாய் சேமதடைந்ததால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசும் நீரை மக்கள் பருகும் அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.பெரியகுளம் நகராட்சி, தென்கரை 16 வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளான தண்டுப்பாளையம் பள்ளிவாசல் 1 மற்றும் 2 வது தெருக்கள், முத்தையா கோயில் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பள்ளிவாசல் 2 வது தெருவில் சாக்கடை கட்டுமானப் பணிக்கு நகராட்சி பொறியியல் பிரிவினர் சர்வே செய்து 10 மாதங்களாகியும் பணி துவங்கவில்லை. இதனால் மழை காலங்களில் சாக்கடையை ஓட்டிச் செல்லும் குடிநீர் குழாய் வழியாக குடிநீரும், சாக்கடையும் கலந்து செல்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது. தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்கற்கள் முறையாக பதிக்காமல் ஆங்காங்கே சேதமடைந்து வருகிறது. இப்பகுதியில் ரோடு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆண்கள் சுகாதார வளாகத்தில் மின் மோட்டார் பழுதால் அருகேயுள்ள பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது.தினமலர் நாளிதழின் குடியிருப்போர் குரல் பகுதிக்காக அப்பகுதியில் வசிக்கும் பிலால், அக்கீம், நூர்முகமது, பீர்ஹபீப், ஒலிமைதீன் ஆகியோர் பேசியதாவது: தண்டுப்பாளையம் பள்ளிவாசல் 2 வது தெருவில் சாக்கடை தாழ்வாக இல்லாமல் ஏற்றம், இறுக்கமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கடந்து செல்லாமல் ஆங்காங்கே தேங்குகிறது. இதனால் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகிறோம். முத்தையா தெருவில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. காமாட்சியம்மன் தெருவில் பாதாளச்சாக்கடை சிறிய அளவிலான பழைய குழாய் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பெரியகுழாய் அமைக்க பல முறை கோரிக்கை வைத்துள்ளோம் நடவடிக்கை இல்லை. இதனால் மழைக்காலங்களில் மேன்ஹோல் மூடி திறந்து வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. இரவில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கிறது. விரைவில் பாதாளச்சாக்கடை விரிவாக்கம் செய்ய வேண்டும். மாடுகள், நாய்களால் தொல்லை
மாடு வளர்ப்போர் பலர் பால் கறந்துவிட்டு தீவனம் கொடுக்காமல் தண்டுப்பாளையம் ரோட்டில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் தெருக்களில் கிடக்கும் மாட்டு சாணத்தில் பலர் வழுக்கி விழுந்து காயப்படுகின்றனர். இதே போல் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரு வீட்டில் 10 நாய்கள் வளர்க்கின்றனர். இதனால் இரவில் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சிசிடிவி கேமரா உடைப்பு
இந்த வார்டில் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் 27 கேமராக்கள் பொருத்தியது. இதில் 4 கேமராக்களை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். இது குறித்து நகராட்சி பொறியாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் டி.எஸ்.பி., யிடம் புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும் 7 கேமராக்கள் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. மரத்தை தொட்டால் ஷாக்
இப்பகுதியில் கிடுகு பின்னும் தெருவில் பூவரசம் மரம் நடுவே உயரழுத்த மின் கம்பி செல்கிறது. மழை காலங்களில் மின் வயர் மரத்தில் உரசும் போது ஏற்படும் உராய்வால் அப்போது மரத்தை தொட்டால் ஷாக் அடிக்கிறது. சிறுவர்கள் அதிகமுள்ள இந்த பகுதியில் மின் வாரியம் உயரழுத்த மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மேலும் மாதாந்திர பராமரிப்பின் போது மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருவில் 500 மீட்டர் தூரம் சாக்கடை கட்டப்படாததால் வீடுகளில் வால் புழுக்கள் செல்கிறது. புறக்கணிக்கப்பட்ட வார்டாக உள்ளது.-