உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குவாரிகளில் கனிம கொள்ளை; ரூ.138 கோடி செலுத்த உத்தரவு; பெரியகுளம் சப்-கலெக்டர் நடவடிக்கை

குவாரிகளில் கனிம கொள்ளை; ரூ.138 கோடி செலுத்த உத்தரவு; பெரியகுளம் சப்-கலெக்டர் நடவடிக்கை

தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 39 மண், கல் குவாரிகளில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 பேருக்கு அபராதத்துடன் ரூ.138 கோடி செலுத்த பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் உத்தரவிட்டுள்ளார்.பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டி பட்டி, தேனி, பெரிய குளம் தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்களில் செயல்படும் தனியார், அரசு நிலங்களில் உள்ள குவாரிகளில் கனிமவளக்கொள்ளை நடப்பதாக 2020ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பேதுரான் என்பவர் வழக்கு தொடந்தார். விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.2021ல் அண்ணா பல்கலை சார்பில் குவாரிகளில் ட்ரோன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள், கிராவல் மண் வெட்டி எடுத்தது உறுதியானது.இக்குவாரிகளில் இருந்து ரூ. 92.56 கோடி மதிப்பிலான மண் 326 கன மீட்டர், கிராவல் 16.15 லட்சம் கன மீட்டர், உடைகல் 17.59 கன மீட்டர் கூடுதலாக வெட்டி கனிமம் கொள்ளை போனது தெரிய வந்தது. இந்த குவாரிகளை நடத்தி வந்த 58 பேரிடமும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் முறைகேடாக வெட்டி எடுக்கப் பட்ட ரூ.92.56 கோடி கனிமத்திற்கான தொகை, அதற்கான சீனியரேஜ் கட்டணம் ரூ.15.11 கோடி, அபராதத்தொகை ரூ.30.23 கோடி என மொத்தம் ரூ.138.4 கோடியை 58 குவாரி உரிமையாளர்களும் செலுத்த பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
நவ 20, 2024 10:41

சப் கலெக்டர் திரு ரஞ்சித் பீடம் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள் நமது மாநிலத்தை சீரழிக்கும் இத்தகைய இடைத்தரகர்கள் கனிம வளத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அரசின் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் எனவே இவர்களுக்கு இந்த அபராத தொகையை வட்டியுடன் வசூலிக்க ஏற்பாடு செய்வது மாநிலத்திற்கும் நாட்டுக்கும் நல்லது