உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

தேனி: 'ரோடு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கொடுவிலார்பட்டி, குள்ளப்புரம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொடுவிலார்பட்டி ஊராட்சி ஆனந்த்நகர் குடியிருப்போர் வேல்முருகன், முருகேஸ்வரி, காயத்ரி வழங்கிய மனுவில், 'குடியிருப்பு பகுதியில் மழை பெய்தால் நீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படு கிறோம். ரோடு, வடிகால் வசதி செய்து தர ஊராட்சியில் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாக்கடை வடிகால் வசதியுடன் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் தேனி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'பல தலைமுறைகளாக அல்லிநகரம் மந்தை குளம் கண்மாய் கரையில் வசிக்கிறோம். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதாக நோட்டீஸ் வழங்கி உள்ளனர். வீடுகளுக்கு சொத்துவரி, குழாய்வரி, மின்கட்டணம், உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். சிலர் வசிக்கும் இடத்திற்கு பத்திரம் வைத்துள்ளனர். தற்போது உள்ள இடத்திலேயே வசிக்க வசதி செய்து தர வேண்டும்,' என இருந்தது. குள்ளப்புரம் ஊராட்சி சங்கரமூர்த்திபட்டி பாண்டீஸ்வரன் மனுவில், 'எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தனர். ஆனால் அவை கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. ஊராட்சியில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் வழங்க,' கோரியிருந்தார். விவசாயிகள் மனு பெரியகுளம் பாம்பாறு வாய்க்கால், நந்தியாபுரம் கண்மாய், பொட்டைகுளம் கண்மாய், லக்கியம்பட்டி கண்மாய், பொட்டை வண்ணான்குளம் கண்மாய், நெடுங்குளம் காண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் முத்துவேல் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'நந்தியாபுரம், பொட்டைவண்ணான்குளங்களை விதிகளுக்கு முராணாக நீர்வளத்துறையினர் மீன்பாசி குத்தகைக்கு ஏலம் விட்டுள்ளனர். சில குளங்களில் நீர் இல்லை என கூறி ஏலம் விடவில்லை. கண்மாய் மாசுபடுத்தாமல் பராமரிக்க விவசாயிகள் ஏலம் கோரினால் மறுக்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிக்கு அரசு, மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. இதனால் எங்கள் சங்க பதவிகளை ராஜினாமா செய்கிறோம் என்றிருந்தது. எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்ட தலைவர் அபுபக்கர்சித்திக் மனுவில், 'மாவட்டத்தில் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளக்கொள்ளையை தடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், 18 ம் கால்வாய் நீர்திறப்பு நாட்களை அதிகரிக்க வேண்டும்,'வலியுறுத்தி இருந்தனர். நிர்வாகிகள் தபிபுல்லா அன்சாரி, லத்திப் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி