கடைக்குள் வியாபாரி தற்கொலை; போலீசார் விசாரணை தீவிரம்
சின்னமனூர்; சின்னமனூரில் வியாபாரி சதீஷ் 33, கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சின்னமனூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஆக. 17 ல் அக்ரஹாரத்தில் நடத்தி வரும் கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சதீஷ் தற்கொலைக்கு கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர்,உறவினர்கள் சின்னமனூரில் ரோடு மறியல் செய்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர். அதன் பின் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் சதீஷ் வங்கி பரிவர்த்தனை விபரம், அவருடன் பண பரிவர்த்தனைகள் செய்து கொண்டவர்கள் யார். யார் யாரிடம் கடன் பெற்றுள்ளார், கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா போன்ற தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி பதிவு செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கடன் கொடுத்த பலரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.