முடிவுக்கு வராத வேலை நிறுத்த போராட்டம் உற்சாகம் இழந்த விசைத்தறி தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையில் வருவாய் இழந்து வேதனை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சனையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் முடிவுக்கு வராமல் 9 நாட்களாக தொடர்கிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உற்சாகத்துடன் சேலைகள், வேஷ்டிகள் உற்பத்தியில் இருக்க வேண்டிய விசைத்தறி தொழிலாளர்கள் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வருவாய் இழப்பால் வேதனை அடைந்துள்ளனர்.சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 3,500க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள், 30, 40 ம் நம்பர் நூல்களில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளை, கலர் வேட்டிகள் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி ஒப்பந்தம் முடிந்தும் புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்தத்திற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன் வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஜனவரி 1 முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் வீடுகளில் பொங்காத பொங்கல்
தைப்பொங்கல் பண்டிகையில் சேலைகள், வேட்டிகளுக்கான தேவை கூடுதலாக இருக்கும். இதனால் பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பே விசைத்தறி தொழிலாளர்கள் உற்சாகமான பணிகளில் ஈடுபடுவர். இந்த ஆண்டும் கூலி உயர்வுக்குப் பின் தைப்பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட திட்டமிட்டுருந்தனர். ஆனால் கூலி உயர்வு பிரச்னைகள் துவக்கிய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.திண்டுக்கல் தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஜனவரி 21ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் இன்னும் இரு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் ஏற்பட்ட வேலை இழப்பு அடுத்தடுத்து வரும் வேலை இழப்பால் இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் வேதனையில் தவிக்கின்றனர்.