இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
கம்பம்: இறந்தவர்கள் விபரங்களை நகராட்சிகளில் பதிவு செய்யாதவர்கள், சான்றிதழ் கேட்டு செல்லும் போது, 'போலீசாரின் உறுதித்தன்மை சான்றிதழ் பெற்று வர வலியுறுத்துவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.இறப்பை பதிவு செய்யாதவர்கள், நகராட்சிகளில் பதிவு இல்லை என்ற சான்றிதழை பெற்று, வருவாய் கோட்டாட்சியரிடம் முறையிடுவர். உரிய விசாரணை முடிந்து, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த பின் சான்றிதழ் வழங்குவது நடைமுறை வழக்கம். ஆனால் தற்போது தனது தாய், தந்தை என யாராவது இறந்து அதை பதியாமல் விட்டவர்கள், நகராட்சிக்கு சென்று சான்றிதழ் கேட்டால், அதாவது பதிவு இல்லை என்ற சான்றிதழ் கொடுப்பதற்கே, விண்ணப்பதாரர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இறந்தது உண்மை என்ற (உறுதித்தன்மை சான்றிதழ்) பெற்று வந்து நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் நகராட்சி இறந்த பதிவு இல்லை என்ற ஒற்றை வரி சான்றிதழ் தருவார்கள். அதை வாங்கி பின் ஆர்.டி.ஒ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் மீண்டும் வி.ஏ.ஒ., விசாரிக்க உத்தரவிடுவார். அதன் பின் நாளிதழில் விளம்பரம் தந்து, சான்றிதழ் பெற வேண்டும்.'பதிவுத்துறை தலைவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி தான் நாங்கள் போலீஸ் சான்றிதழ் கேட்கிறோம்.' என, நகராட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர்களை தவிர்த்து விண்ணப்பித்த அனைவரையுமே போலீஸ் ஸ்டேஷன் அனுப்புவது தொடர்கிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்கள் இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பதிவுத்துறை தலைவரின் புதிய உத்தரவை திரும்ப பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.