உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வராகநதி பால பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் சிரமம் மேல்மங்கலத்தில் சுகாதார சீர்கேட்டால் அவதி

வராகநதி பால பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் சிரமம் மேல்மங்கலத்தில் சுகாதார சீர்கேட்டால் அவதி

தேவதானப்பட்டி : மேல்மங்கலம் ஊராட்சியில் வராகநதியின் குறுக்கே பாலம் கட்டுமானப்பணி நிறைவு பெறாததால் ஆற்றை கடந்து செல்ல விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ஊராட்சியில் பல்வேறு பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யாததால் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில் 12 வார்டுகளில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு மூன்று அக்ரஹாரம் தெருக்கள், அம்மாபட்டி தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, சவுராஷ்டிரா தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளது. வடுகபட்டி மேல்மங்கலம் கல்லுக்கட்டு பஸ்ஸ்டாப் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி சேதமாகி ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் முதல் வார்டு பிள்ளைமார் தெருவில் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர். கிராம மக்கள் கூறியதாவது:

திறந்தவெளி கிணற்றினால் ஆபத்து

முத்துலட்சுமி, வடக்கு தெரு, மேல்மங்கலம்: முதல் வார்டு பிள்ளைமார் தெருவில் குடியிருப்புகள் மத்தியில் பயன் இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. 20 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. இப் பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயர முக்கிய கிணறாக உள்ளது. இத் தெருவில் சிறுவர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வெளியூரிலிருந்தும் உறவினர் வீடுகளுக்கு சிறுவர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். சிறுவர்கள் ஆபத்தை உணராமல் திறந்த வெளி கிணற்றை சுற்றி விளையாடுகின்றனர். பாதுகாப்பு கருதி கிணற்றை சுற்றி மேல் மூடிஅமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இரு முறை கிணற்றை அளந்து சென்ற ஊராட்சி நிர்வாகம் மூடி அமைப்பதற்கு தாமதித்து வருகின்றனர்.

கொசுக்கடியால் அவதி

கிருஷ்ணமூர்த்தி, பஜனை மடத்தெரு, மேல் மங்கலம்: பஜனைமடத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப சாக்கடை வசதி இல்லாததால், ஆங்காங்கே சாக்கடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வடக்கு தெரு குழந்தைகள் மையம் அருகே சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. இரவில் டூவீலரில் செல்பவர்கள் விழுந்து காயப்படுகின்றனர்.

வராகநதி பாலம் திறக்க வேண்டும்

சரவணக்குமார், அக்ரஹாரம் தெரு, மேல்மங்கலம்: மேல்மங்கலம் அக்ரஹாரம் தெருவிலிருந்து வராகநதியின் குறுக்கே ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தில் பாலம் கட்டுமானப்பணி 2022ல் துவங்கப்பட்டது. 2024 மே மாதம் பணி முடிப்பதற்கு ஒப்பந்தம் பெறப்பட்டது. தற்போது வரை பணி முடிக்கப்படவில்லை. பணி ஜவ்வாக இழுக்கிறது. ஆற்றின் மறுகரையில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலம் உள்ளது. விவசாயிகள் ஆற்றை கடந்து விளை நிலங்களுக்கு செல்ல வேண்டும். மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சிரமமாக உள்ளது. எனவே பாலம் பணியை விரைவில் முடித்து திறக்க வேண்டும். மேலத்தெரு கடைவீதி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4,5ம் வகுப்பு மேற்கூரை ஓடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் இலவம் மரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்திலிருந்து அடிக்கடி கிளைகள் ஒடிந்து விழுகிறது. அருகே ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. ஆடிக்கொண்டு இருக்கும் மரம் விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ