சிறுமிக்கு பாலியல் தொல்லை உறவினர் போக்சோவில் கைது
தேனி : வீரபாண்டி அருகே 13 வயது பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொந்தரவு செய்த உறவினர் காளிமுத்துவை 35, தேனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். வீரபாண்டி அருகே 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தாய் இறந்துவிட்டார். தந்தை வேறு திருமணம் முடித்து சென்று விட்டார். பெற்றோர் பராமரிப்பு இல்லாத சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அங்கு சிறுமிக்கு காளிமுத்து 35, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். இதை பொறுத்துக் கொள்ளாத சிறுமி சத்தம் போட, சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். நடந்த விபரங்களை பாட்டியிடம் சிறுமி கூறினார். வயது மூப்பின் காரணமாக பாட்டி எதுவும் செய்ய முடியாததால், தனது சித்தி வீடு உள்ள திருப்பூர் மாவட்டத்திற்கு சிறுமி, தனது சகோதரியுடன் சென்று தங்கினார். இதனை அறிந்த காளிமுத்து அங்கு சென்றும் சிறுமிகளைஅழைத்துச் செல்ல அனுமதிக்கும்படி உறவினர் பெண்ணை மிரட்டினார். அவர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அங்கு புகாரை பெற்ற போலீசார் தேனி மாவட்டத்திற்கு மாற்றினர். எஸ்.பி., சினேஹா பிரியா உத்தரவில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம், எஸ்.ஐ., சுமதி தலைமையிலான போலீசார் காளிமுத்துவை போக்சோவில் கைது செய்தனர்.