லோயர்கேம்பில் 18ம் கால்வாய் கரை உடைப்பு; சீரமைப்பு பணிகள் துவக்காமல் மெத்தனம் - ஒதுக்கிய ரூ.12 கோடி நிதியை பயன்படுத்த வலியுறுத்தல்
கூடலுார்: 18ம் கால்வாய் கரை தற்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் லோயர்கேம்ப் அருகே முழுமையாக உடைந்தது. இதனை சீரமைக்கும் பணியை துவக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் இந்த ஆண்டும் இக்கால்வாயை நம்பியிருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தம்பாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 2010ல் பயன்பாட்டிற்கு வந்தது. இத்திட்டம் மூலம் உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆண்டுதோறும் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். 2023ல் இரண்டு மாதங்கள் தாமதமாக டிச.19ல் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த போதிலும் அரசு உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் டிச.21ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தாமதமாக திறக்கப்பட்ட போதிலும் பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக சீரமைத்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். லோயர்கேம்ப்பில் இருந்து கடைமடை வரையுள்ள கால்வாயை ஆக்கிரமிப்புகள் அகற்றி துார்வாரவும், ஆங்காங்கே சேதமடைந்த கரைப்பகுதிகளை சீரமைக்கவும் முன்வர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அரசு 3 மாதத்திற்கு முன் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் நிதி வரவில்லை எனக் கூறி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை துவக்க தாமதப்படுத்தி னர். இந்நிலையில் இந்த ஆண்டு அக்.1ல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து எம்.பி., தங்க தமிழ்செல்வன் தண்ணீர் திறந்தார். அக். 17 இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் லோயர்கேம்ப் தலை மதகில் இருந்து 700வது மீட்டரில் கரைப்பகுதி முழுமையாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதேபோல் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால் உடைப்பு ஏற்பட்டு ஐந்து நாட்களாகியும் இதுவரை சீரமைப்பு பணிகளை துவக்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் கால்வாய் நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.