உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பராமரிப்பு இல்லாத பொதுக்கழிப்பறையால் சிரமம்: சுகாதார பாதிப்பில் தவிக்கும் ரெங்கசமுத்திரம் ஊராட்சி

பராமரிப்பு இல்லாத பொதுக்கழிப்பறையால் சிரமம்: சுகாதார பாதிப்பில் தவிக்கும் ரெங்கசமுத்திரம் ஊராட்சி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதார பாதிப்பில் பொதுமக்கள் தவிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம், ஜம்புலிபுத்தூர், குறும்பபட்டி, லட்சுமிபுரம், ஸ்ரீ ரங்காபுரம், அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சிமென்ட் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு அளவு இல்லை. இங்கு உடைந்த வடிகால், அகற்றப்படாத குப்பை, குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேக்கம் ஆகியவற்றால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடு குறித்து பொதுமக்கள் புகார்களை பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தட்டிக் கழிக்கின்றனர். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: தொற்று நோய் பரவும் அபாயம் சரவணன், ஜம்புலிபுத்தூர்: சில கி.மீ., தூரத்தில் வைகை அணை இருந்தும் கிராமத்திற்கு குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதித்து பல மாதங்கள் ஆகியும் குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கவில்லை. நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் கலந்து விநியோகிப்பதால் தண்ணீரின் தன்மை பாதிக்கிறது. கழிவுநீர் சாக்கடை சுத்தப்படுத்தி பல மாதமாகிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் சாக்கடை அருகிலேயே இருப்பதால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. தெரு விளக்குகள் எரிவதில்லை. பொதுக்கழிப்பறை பராமரிப்பன்றி மூடிக்கிடக்கிறது. இப்பகுதி குப்பை கிடங்கானதால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. கோயில் கழிப்பறை பராமரிப்பு இன்றி மூடல் பாலமுருகன், ஜம்புலிப்புத்தூர்: கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வீட்டைச் சுற்றி தேங்கும் கழிவு நீரில் வரும் புழுக்கள் வீடுகளுக்குள் புகுந்து அருவருப்பு ஏற்படுத்துகிறது. கழிவு நீரை முறையாக கடத்தாததால் கிராமம் முழுவதும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. தெருக்களில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் பல இடங்களில் சரி செய்யப்படவில்லை. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வரத்து வாய்க்காலில் குப்பை சுகுமார், ரெங்க சமுத்திரம்: ரெங்கசமுத்திரம் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை சுத்தம் செய்வது இல்லை. திருமண மண்டபம் நாடக மேடை சேதம் அடைந்துள்ளது. திருமண மண்டபம் பயன்பாடு இன்றி சிதிலமடைந்து வருகிறது. தெருக்களில் சிமென்ட் ரோடு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களில் ஆக்கிரமிப்பால் ஆட்டோக்கள் கூட அவசரத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. சுடுகாடு செல்லும் பாதையில் தெருவிளக்கு வசதி இல்லை. கிராமத்தின் ஒட்டுமொத்த குப்பையையும் கிராமத்தின் நடுவில் உள்ள நீர் வரத்து கால்வாயில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் தரும் புகாருக்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ