சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் புனரமைப்பு தீவிரம்
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகள் ஹிந்து அறநிலை துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இக்கோயில் ஹிந்து அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கோயில் கும்பாபி ஷேகம் முடிந்து 12 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜைகள் 2024 டிச.,10ல் நடத்தப்பட்டு, கோயில் வளாகத்தில் பரிவார தெய்வங்களான முருகன், விநாயகர், சிவன், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வார், நாகம்மாள், நவக்கிரக சன்னதிகளை மூடிவிட்டனர். இதனால் பக்தர்கள் ஓராண்டுக்கும் மேலாக முத்துமாரியம்மனை தவிர மற்ற தெய்வங்களை வழிபட முடியவில்லை. கும்பாபிஷேகத்தை விரைந்து முடிக்க பல தரப்பிலும் ஹிந்து அறநிலையத்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோயில் சுவர், கோபுரம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கருவறை மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ள இடங்கள் புனரமைப்புக்குப் பின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் துவங்கும் என்று ஹிந்து அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.