விலையில்லா கோழி, பசு வழங்கும் திட்டங்கள் செயல்படுத்த கோரிக்கை
கம்பம் : விலையில்லா நாட்டுக் கோழி குஞ்சுகள், பசு மாடுகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விலையில்லா கோழிகள் 20 வழங்கப்பட்டது. நாட்டுக் கோழி குஞ்சுகள் தலா 250 வழங்கப்பட்டது. அதற்கு ஷெட் அமைக்கவும், பராமரிப்பிற்கும் நிதியுதவி செய்யப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்து பசுக்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நிதியாண்டிலும் இத் திட்டங்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் தி.மு.க. பொறுப்பேற்ற பின் விலையில்லா கோழி, மாடுகள் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறுகையில், விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் 250 வழங்குவது பற்றி சில மாதங்களுக்கு முன் நடந்த ஆய்வு கூட்டத்தில் விபரம் கேட்டனர். ஆனால் அதற்கு பின் எந்த தகவலும் இல்லை. இயக்குநரகத்தில் இருந்து தகவல் வந்தால் பயனாளிகளை தேர்வு செய்ய தயாராக உள்ளோம் என்றனர்.விவசாயிகள் கூறுகையில், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்கின்றனர்.