உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் தமிழில் வழங்க கோரிக்கை

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் தமிழில் வழங்க கோரிக்கை

மூணாறு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் தமிழில் வழங்க கோரிக்கை எழுந்தது. கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது. இம் மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக தேவிகுளம் சட்டசபை தொகுதியில் உள்ள 195 ஓட்டுச் சாவடியில் 110 ஓட்டுச் சாவடிகள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளன. அப்பகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக தமிழர்கள் அதிகளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மலையாளம் மொழி எழுதவும், வாசிக்கவும் தெரியாது. விண்ணப்ப படிவங்கள் மலையாளம் மொழியில் அச்சிடப்பட்டுள்ளதால், படிவத்தை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கின்றனர். அதனால் அதனை பூர்த்தி செய்யும் பொறுப்பு வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களுக்கும் மலையாள மொழி தெரியாததால் படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தேவிகுளம் சப் கலெக்டர் தலைமையில் நவ.1ல் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் படிவங்கள் தமிழிலும் அச்சடித்து வழங்க வேண்டும் என கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அதிகாரிகள் பொருட்படுத்தாததால் தமிழர்களான வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோர் படிவங்களை பூர்த்தி செய்வதில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ