சுகாதார நிலையத்தில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தேவை; பேரவை கூட்டத்தில் தீர்மானம்
கூடலுார்: ''கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவிக்கப்படும் பச்சிளங் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும்.'' என, வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது. நகராட்சித் தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 28 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை மாற்றி புதியதாக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட பழைய எக்ஸ்ரே மெஷினை மாற்றி புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மெஷின் வழங்க வேண்டும். பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான புதிதாக சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும். கூடலுாரில் ரத்த சேமிப்பு கிடங்கு விரைவில் துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை மாவட்ட அளவில் நடக்க உள்ள சுகாதார பேரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதை மாநில அளவில் நடக்க உள்ள சுகாதாரப் பேரவை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என, வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.