நியமன எம்.பி.,பதவியை வணிகர்கள் பிரதிநிதிக்கு வழங்கக்கோரி தீர்மானம்
தேனி: ராஜ்யசபா நியமன எம்.பி.,பதவி வணிகர்கள் பிரதிநிதிக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும்.'' என, வீரபாண்டியில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார், மாநில பொருளாளர் சதக்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார் தீர்மானங்களை வாசித்தார். பொதுக்குழுவில் பண்டிகை காலங்களில் திருமணம் மண்டபம், அரங்குகளில் கண்காட்சி நடத்திட தடை விதித்திட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இரவு நேர கடைகளை போலீசாரின் இடையூறு இன்றி நடத்திடவும், 2026ல் வணிகர் தின மாநில மாநாட்டினை மே 5ல் திருவாரூரில் நடத்தவும், அரசியல் சார்பின்றி வணிகர் சட்டங்களை சீரமைக்கவும், வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ராஜ்யசபாவில் நியமன எம்.பி., பதவியை, வணிகர் அமைப்பின் பிரதிநிதிக்கு வழங்கிட வேண்டும் என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், 'வணிகர்களின் கோரிக்கை அறிக்கையாக தயாரித்து அரசியல் கட்சியினரிடம் வழங்குவோம். எங்கள்கோரிக்கையை யார் நிறைவேற்றுவார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். கடந்த முறை தி.மு.க.,விற்கு நாங்கள் கொடுத்த கோரிக்கையில் 60 சதவீத நிறைவேற்றியுள்ளது. 30 சதவீத கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருவரங்கப் பெருமாள் பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன், மாவட்ட முதன்மை துணை தலைவர் உதயகுமார், இளைஞரணி பிரத்தம் தீவாகர், அவைத்தலைவர் தங்கராஜ், மாநில துணைத் தலைவர் பெருமாள், இணைச்செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் வெங்கடேஷ், கலைமணி, சந்திரகுமார், சன்னாசி, முத்துக்கோவிந்தனர், ராஜசேகரன், முருகானந்தம், வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.