உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலை பகுதியில் பாலிதீன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்; சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு தேவை

மேகமலை பகுதியில் பாலிதீன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்; சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு தேவை

மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜ மெட்டு, தூவானம் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இது இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதிகளாகும். வன உயிரினங்கள் நடமாட்டம், ரோட்டை ஒட்டியே அமைந்துள்ள மணலாறு மற்றும் ஹைவேவிஸ் அணைகள் பார்க்க உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே சுற்றுலா பயணிகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் வாகனங்களில் வருகின்றனர்.வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர், சாப்பாடு, திண்பண்டங்கள், மது உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கப், பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும், பாலிதீன் கேரி பேக்குகளையும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் வன உயிரினங்கள் யானைகள் , காட்டு மாடுகள், பாலிதீன் கேரி பேக்குகளை உணவின் வாசனையால் கவர்ந்து அவற்றை சாப்பிடுகிறது. இது வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தாகும். மற்றும் பூமியில் மக்காத பாலிதீன் பைகளால் மண்ணின் வளமும் கெட்டுப் போகும்.பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விதிமீறல் சம்பவங்கள் நடப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. இப்போது ஹைவேவிஸ் மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளை சோதனை செய்து, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். அதையும் மீறி சிலர் கொண்டு செல்கின்றனர். இதே நிலைதான் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வைகை அணை,சின்ன சுருளி, சுருளி, கும்பக்கரை, சோத்துப்பாறை, போடி மெட்டு, குரங்கணி பகுதியில் பாலிதீன் பயன்பாடு அதிகம் உள்ளது.எனவே மேகமலை மற்றும் சுற்றுலா பகுதியில் வனத் துறையினர் தினமும் ரோந்து சென்று சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை