தேனி போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளையடித்தவரின் கால் முறிவு
தேனி: தேனி போதை நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளையடித்த பண்ணைபுரம் மலிங்காபுரம் நித்திஷ்குமார் 23, கால் முறிந்தது. இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொருவரான பண்ணைபுரம் கரியாம்பட்டி உதயகுமார் 24, சிறையில் அடைக்கப்பட்டனர்.தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர்நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணியளவில் நித்திஷ்குமார், உதயகுமார் ஆகியோர் கஞ்சா ஆயில், ஏர்கன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். போலீசார் பிடிக்க முயற்சித்த போது நித்திஷ்குமார் கல்லால் தாக்கியதில் ரோந்து போலீஸ்காரர் முருகேசன் காயமடைந்தார். நித்திஷ்குமாரை அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய உதயகுமாரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கி (ஏர்கன்), கஞ்சா, மெத்தாம்பெட்டமைன், கஞ்சா ஆயில், வீடியோ கேமராக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை சம்பவத்தில் இருந்து நித்திஷ்குமார் தப்பி ஓட முயற்சித்த போது கால்முறிவு ஏற்பட்டது தெரிந்தது. அவரை நேற்று தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கைதிகள் பிரிவில் சேர்க்கப்பட்டார். உதயகுமார் தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.