ரூ.1.11 கோடி மோசடி கில்லாடி பெண் கைது
தேனி : பெரியகுளம் தென்கரையை சேர்ந்த இன்ஜினியர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:என் அக்கா திவ்யா, அவருடைய தோழி செல்வராதாவிடம் பழனி செட்டிபட்டி கனகதுர்கா என்பவர், தான் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாகவும், பணம் கொடுத்தால் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.இதை நம்பிய அவர்களும், என் நண்பர்கள் மூவரும், அரசு வேலைக்காக கனகதுர்காவின் வங்கிக்கணக்கில், 33 லட்சம் ரூபாயை செலுத்தினர். அதுபோல, இ.புதுப்பட்டியை சேர்ந்த ஒச்சு என்ற சூர்யா, கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த சரண்யா ஆகியோர், 26 பேரிடம், 78.21 லட்சம் ரூபாய் என, மொத்தம் 1.11 கோடி ரூபாயை வாங்கினர். அந்த பணத்தை மூவரும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கனகதுர்கா, ஒச்சு என்ற சூர்யா மற்றும் சரண்யா மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஒச்சு என்ற சூர்யாவை போலீசார் ஏப்., 6ல் கைது செய்தனர். பி.எட்., பட்டதாரியான கனகதுர்காவை, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நேற்று கைது செய்தனர். சரண்யா என்ற இன்னொரு பெண்ணை தேடி வருகின்றனர்.