விவசாய கிணறுகளின் மின் ஒயர்கள் தொடர் திருட்டு: பயிர்கள் கருகும் பரிதாபம் போலீசார் நடவடிக்கையில் அலட்சியம்
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியில் விவசாய கிணறுகளில் உள்ள மின் மோட்டார் ஒயர்கள் இரவில் திருடப்படுவதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போலீசில் புகார் அளித்தும் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் உள்ளது. இதில் கரும்பு வாழை, மக்காச்சோளம் உட்பட பல்வேறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப்பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக இரவில் உலா வரும் திருட்டு கும்பல், பாசன கிணறுகளில் உள்ள மின் மோட்டார்களுக்கு செல்லும் மின் ஒயர்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். ஒவ்வொரு கிணறுகளில் இருந்து 100 முதல் 200 மீ., வயர்களை திருடி செல்கின்றனர். விவசாயிகள் பாதிப்பு எ.புதுப்பட்டி மற்றும் வடுகபட்டியைச் சேர்ந்த விவசாயிகள் போஸ், நடராஜ் (ஓய்வு எஸ்.ஐ.,), பழனிவேல், சுப்பிரமணி உட்பட பத்துக்கும் அதிகமானோர் விவசாய நிலங்களில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் மீட்டர் மின் ஒயர்களை திருடியுள்ளனர். இதனால் மின் மோட்டார் இயங்கவில்லை. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகிறது. கடும் சிரமத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளும் நிலையில் திருடர்கள் ஒயர்களை திருடி செல்வது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாகி யுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் மின் ஒயர்கள் வாங்கி இணைப்பு தருவதற்கு தலா குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவிடவேண்டியுள்ளது. முகாமிட்டுள்ள திருடர்கள் மின் ஒயர்களை திருடி அதனை தீயில் எரித்து, செம்பு கம்பிகளை பிரித்து, பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு செல்கின்றனர். இவர்கள் எண்டப்புளி சுடுகாட்டு பகுதியில் பகலில் துாங்கி, இரவில் திருடுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் மனு ரசீது மட்டும் வழங்கி அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பதாக புலம்பு கின்றனர்.