உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை ரத்த அழுத்த நோய் மாத்திரைகள் தட்டுப்பாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை ரத்த அழுத்த நோய் மாத்திரைகள் தட்டுப்பாடு

கம்பம்: தேனி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் புலம்புகின்றனர்.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் அனைவரையும் என்.சி டி. ( Non Communicable Disease) என்ற தொற்றா நோய் பிரிவில் சர்க்கரை,ரத்த அழுத்தம் உள்ளதா என்று பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள் மொத்தமாக வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சென்று மாத்திரை வாங்கி கொள்ள அறிவுறுத்துகின்றனர். இதனால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர்.இது குறித்து மருந்தாளுனர்கள் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் கையிருப்பு இல்லை. புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரகைள் இன்றி அருகில் உள்ள கம்பம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆண்டுக்கு இருமுறை மருந்து மாத்திரை வாங்க நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இந்த நிதி போதுமானதாக இல்லை. மேலும் என்.சி.டி.,(தொற்றா நோய்) திட்டத்தில் மாத்திரைகள் வாங்க ஒதுக்கீடு செய்யும் நிதி மிக குறைவாக உள்ளதால் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. மேலும் சர்க்கரை ரத்த அழுத்த மாத்திரைகள் விலையும் உயர்ந்துள்ளது. அடுத்த நிதி ஒதுக்கீடு ஜனவரி 10 ம்தேதிக்கு பிறகுதான் கிடைக்கும். அதுவரை தட்டுப்பாடு தொடரும். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி