தேனி மாவட்டத்தில் நெல் நடவு இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு; அரசு மானியம் அறிவித்தும் இயந்திரம் இன்றி தவிப்பு
சின்னமனூர்: இயந்திர நெல் நடவிற்கு அரசு மானியம் அறிவித்துள்ள நிலையில் நெல் நடவிற்கு தேவைப்படும் இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் விவசாய பணிகளில் இயந்திர பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. உழவு, களையெடுப்பு, பூச்சி மருந்து தெளிப்பது, அறுவடை என அனைத்தும் இயந்திரப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் இரு போக சாகுபடியும், 5100 ஏக்கரில் ஒரு போக சாகுபடியும் நடைபெறுகிறது.இதில் அறுவடை பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அதற்கு தேவையான இயந்திரங்கள் டெல்டா மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. ஆனால் நெல் நடவு இயந்திரங்கள் மாவட்டத்தில் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இயந்திர நடவிற்கு மானியம் வழங்கிய வேளாண் துறை, சில ஆண்டுகளாக மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இயந்திர நடவை விவசாயிகள் மறந்து விட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின் இலக்கு
இந்நிலையில் தற்போது முதல் போக சாகுபடிக்கு சின்னமனூருக்கு 800 ஏக்கர் , உத்தமபாளையத்திற்கு 400 ஏக்கர் , கம்பத்திற்கு 880 ஏக்கர் இயந்திர நடவிற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். ஆனால் இயந்திர நடவு செய்ய இயந்திரங்கள் எங்கே எனக் கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.கம்பம் வட்டாரத்தில் ஒரு விவசாயி வைத்துள்ளார். ஒரு இயந்திரத்தை எத்தனை பேர்களுக்கு இயந்திரத்தை அனுப்ப முடியும். சின்னமனூர், உத்தமபாளையத்தில் ஒருவரிடம் கூட நடவு இயந்திரம் இல்லை.எனவே வேளாண் பொறியியல் துறை நடவு இயந்திரங்களை வாடகைக்கு வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அல்லது டெல்டா மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வருவது போன்று நடவு இயந்திரங்களை கொண்டு வர வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இயந்திர நடவு நடைபெறும். இல்லையென்றால் அரசு அறிவித்தும் இயந்திர நடவு திட்டம் செயல்படுத்தப்படாமல் போய்விடும்.