போடி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை; சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு
போட: - போடி அரசு மருத்துவமனையில் கண் பரிசோதகர், நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் முறையான சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால் நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.இம்மருத்துவமனைக்கு தினசரி 1800 நோயாளிகள் வந்து செல்கின்றனர். 100 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். கண் பரிசோதகர், குடும்ப நலப் பிரிவில் நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன், காவலாளி, துப்புரவு பணியாளர்கள் என, தினசரி பணிகளை கவனிக்க ஆட்கள் இல்லை. இதனால் மருத்துவமனையில் பணிகள், சிகிச்சை நடைமுறைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கண் பரிசோதகர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால் பாதிக்கப் பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மின் ஒயரிங் செய்யப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அலுமினிய ஒயரிங் செய்யப்பட்டு உள்ளதால் அடிக்கடி மின் கம்பிகள் உரசி, 'ட்ரிப்' ஏற்பட்டு, மின்தடை ஏற்படுகிறது. மின் தடையால் சில நேரங்களில் மகப்பேறு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்கிறது. ஜெனரேட்டர் இருந்தும் ஒயரிங் சேதமடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பிரசவத்தில் உயிர் பலியாகும் அபாய நிலை ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணிகளை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. போதிய துப்புர பணியாளர்கள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 'பிளம்பர்'கள் இல்லாததால் குடிநீர் குழாய், போர்வெல் குழாய்களை உடனடியாக பழுது சீரமைக்க முடியாத நிலை உள்ளது. முக்கிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பாதுகாப்பு பணியாளர் இல்லாமல் திறந்தவெளியாக உள்ளதால் கால்நடைகள் தாராளமாக உலா வருகின்றன.நோயாளிகள் நலன் கருதி காலி பணியிடங்களை நிரப்ப மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.