உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிகளுக்கு திருமணம் செய்த 11 பெற்றோர்கள் மீது வழக்கு சமூக நலத்துறை தகவல்

சிறுமிகளுக்கு திருமணம் செய்த 11 பெற்றோர்கள் மீது வழக்கு சமூக நலத்துறை தகவல்

தேனி: மாவட்டத்தில் 17 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்த 11 பெற்றோர்கள் மீது சமூக நலத்துறை புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிறுமிகள் திருமணம், சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ஆனாலும், கம்பம், போடி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, பெரியகுளம் பகுதிகளில் இச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இது பற்றி சமூக நலத்துறையினர் கூறியதாவது: சமூக நலத்துறை சார்பில் சிறுமிகள் கர்ப்பமடைவது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் இணைந்து ஆய்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் சிறுமிகள் கர்ப்பம் தொடர்பாக 75 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர 44 சிறுமி திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 33 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திருமணங்களுக்கு காரணமான 11 பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு குழந்தைகள் நலக் குழு மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அவர்கள் பெற்றோருடன் செல்ல விரும்பாத நிலையில் அரசு காப்பகங்களில் தங்க வைத்து, கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சிறுமிகள், சிறார்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத செயல்கள், சிறுமிகளுக்கு திருமணங்கள் நடந்தால் 1098 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ