மஞ்சப்பை இயந்திரம் பழுது
பெரியகுளம்: பெரியகுளம் காய்கறி மார்க்கெட்டில் மஞ்சப்பை இயந்திரம் பழுதால் பயன்பாடு இன்றி உள்ளது. பெரியகுளம் நகராட்சி தென்கரையில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிளது. இங்கு தினமும் ஏராளமானோர் வருகை தந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் வசதிக்காக மார்க்கெட் நுழைவுப்பகுதியில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டது. இதில் ரூ.10 நாணயம் அல்லது ரூ.10 நோட்டினை செலுத்தி ஒரு மஞ்சள் பை பெற்றனர். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மார்க்கெட் பகுதியில் பாலிதீன் பைகள் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் பல நாட்களாக மெஷின் பழுதடைந்துள்ளது. நாணயத்தை போட்டால் மஞ்சள் பை வரும் இடத்தில் வெறும் 'காற்று மட்டும்' வருகிறது. இது குறித்து யாரிடமும் பொதுமக்கள் கேட்பதில்லை. மெஷின் பழுது பணம் செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு போர்டும் வைக்கவில்லை. இதனால் மிஷினில் ரூ. 3 ஆயிரம் வரை கேட்பாரற்று உள்ளது. நகராட்சி நிர்வாகம் மஞ்சப்பை இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.