ஓடும் பஸ்சிலிருந்து குதித்த ராணுவ வீரர் பலி
தேவதானப்பட்டி: மதுபழக்கத்தை விடும்படி கூறிய மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் குதித்த ராணுவ வீரர் சிவக்குமார் பலியானார். கம்பம் மலையம்மாள்புரம் செல்லாண்டியம்மன் கோயில் தெரு சிவக்குமார் 40. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி 38. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். செப்.20 முதல் ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். பாரதி கடன் வாங்கியது சம்பந்தமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்தது. செப்.21ல் பாரதி சிவக்குமாரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன், தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் தனது பெரியம்மா தமிழரசி வீட்டுக்குசென்றுள்ளார். அலைபேசியில் பாரதியிடம் சண்டைபோட மாட்டேன், உன்னை பார்க்க வேண்டும் எனவும், பழநிக்கு கோயிலுக்கு சென்று வரலாம் என கணவர் தெரிவித்துள்ளார். இதற்கு பாரதி, நீங்கள் இனி மது குடிக்காமல் இருந்தால் வருவதாக தெரிவித்துள்ளார். தேனி பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து குடும்பத்துடன் கோவை செல்லும் அரசு பஸ்சில் சென்றனர். அப்போது சிவக்குமார் மது குடித்திருந்தது பாரதிக்கு தெரிந்தது. இதனால் பஸ்சில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோட்டில் பஸ் செல்லும் போதுஜி.மீனாட்சிபுரம் அருகே கோபத்தில் சிவக்குமார், ஓடும் பஸ்சில் மூடியிருந்த கதவை திறந்து குதித்தார். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிவக்குமாரை பரிசோதித்தபோது தலையில் பலத்த காயத்தால் இறந்ததாக தெரிவித்தனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--