நெட்ஒர்க் பிரச்னை என யு.பி.ஐ., பரிவர்த்தனையை தவிர்க்கும் கடைகள்
தேனி: மாவட்டத்தில் சில டீக்கடைகள், பேக்கரிகளில் கடந்த சில நாட்களாக யு.பி.ஐ., பணபரிவர்த்தனை முறைகள் இல்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் பொருட்கள் வாங்க செல்வோர் அவதியடைந்துள்ளனர். மாவட்டத்தில் ரோட்டோர கடைகள் முதற்கொண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக யு.பி.ஐ., பணபரிவர்த்தனை பயன்பாட்டில் உள்ளது. இதனால் சில்லரை பிரச்னை தவிர்க்கப்படுகிறது, பணத்தை கையில் எடுத்து செல்ல தேவையில்லை என்ற நிலை உருவானது. தற்போது பெரும்பாலானவர்கள் யு.பி.ஐ., பரிவர்த்தனை மூலம் பொருட்கள் வாங்குகின்றனர். ஆனால், தேனி நகர்பகுதியில் கடந்த சில நாட்களாக சில டீக்கடைகள், பேக்கரிகளில் யு.பி.ஐ., பரிவர்த்தனை கிடையாது என அறிவிப்பு பதாகைகள் வைத்துள்ளனர். பலரும் பொருட்களை வாங்கிய பின் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பணம் எடுத்து வந்து பொருட்களை வாங்குகின்றனர். சிலர் பொருட்களை வாங்காமல் செல்லும் நிலை உருவாகி உள்ளது. கடைகாரர்கள் சிலர் கூறியதாவது: சில நேரங்களில் வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது 'நெட்வொர்க் எரர்' என கூறி பணம் எங்களுக்கு வருவதில்லை. சில நேரம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் சென்றாலும் எங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பணம் வாங்கு வதில்லை என்றனர்.