ஓட்டப் போட்டியில் மாணவர் புதிய சாதனை தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளியில் பாராட்டு விழா
கூடலுார்: மாநில அளவில் நடந்த ஓட்டப் போட்டியில் கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளி மாணவர் இன்பத்தமிழன் புதிய சாதனையை பதிவு செய்தார். மேலும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் மாநில அளவிலான 65வது குடியரசு தின விழா தடகளப் போட்டி நடந்தது. இதில் கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளி மாணவர் இன்பத்தமிழன், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டார். இதில் 200 மீட்டர் ஓட்டத்தில் 22.58 வினாடிகள் (முந்தைய சாதனை 23.43 வினாடிகள்) கடந்து புதிய சாதனை படைத்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் 52.85 (முந்தைய சாதனை 53.74), 600 மீட்டர் ஓட்டத்தில் ஒரு நிமிடம் 27 வினாடிகள் (முந்தைய சாதனை 1 நிமிடம் 29 வினாடிகள்) கடந்து புதிய சாதனையை பதிவு செய்தார்.மூன்று போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவருக்கு சாம்பியன்ஷிப் பட்டம், தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரனாக தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் முதல் வாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்கிறார்.இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், நிர்வாக குழு உறுப்பினர் சிவாபகவத் ஆகியோர் மாணவனுக்கு சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் வெங்கட்குமார், உடற் கல்வி இயக்குனர் கருத்தபாண்டியன், மாணவனின் தந்தை குணா உடன் இருந்தனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.