சேதம் அடைந்த ரோட்டில் தடுமாறும் மாணவர்கள்
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் ஹைஸ்கூல் தெரு மேடும் பள்ளமாக காட்சியளிப்பதால் மாணவர்கள் தடுமாறி பள்ளிக்கு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.இந்நகராட்சியில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, மாவட்ட விளையாட்டு அரங்க விடுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். ரோட்டில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் பள்ளி உள்ளது. இந்த ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன் 'பேவர் பிளாக்' கற்கள் பதித்தனர். ஆனால் பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் குழாய் பராமரிப்பு, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் ரோடு பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. நகராட்சி நிர்வாகத்தில் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் ரோடு சீரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டாலும், இந்த ரோட்டினை நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. இதனால் பள்ளிக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் சில நேரங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர். நடந்து செல்லும் முதியவர்களும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். கல்வித்துறையில் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டாலும், கல்வித்துறையினரும் கண்டு கொள்ளவது இல்லை. தெருவினை சீரமைக்கவும், மாணவர்கள் காயமின்றி பள்ளி சென்று வருவதற்கும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.