தாமதமாக அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் புத்தகம் இன்றி தவிப்பு
தேனி,: அரசுப்பள்ளிகளில் தாமதமாக சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தங்கள் இதுவரை வழங்காததால் கற்றல் பாதிப்பதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். பெற்றோர்களும் சிலரும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மேல்நிலைப்பள்ளிகளில் மே இறுதி, ஜூன் முதல் வாரத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஆனால், அரசுப்பள்ளிகளில் ஜூன் 2ம் வாரத்திற்கு பின் சேர்ந்த பல மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள், சீருடை வழங்கப்படவில்லை.வகுப்பில் அருகில் உள்ள மாணவர்களுடன் இணைந்து படிக்க ஆசிரியர்கள் கூறும் நிலை நீடிக்கிறது. இம்மாத இறுதியில் முதல் இடைத்தேர்வு நடக்க உள்ளது. இதனால் மாலையில் வீட்டிற்கு சென்று மாணவர்கள் படிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. இதே நிலை சில பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீடிக்கிறது. இதுவரை புத்தகம் வழங்காத மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.