வாகன விபத்துக்களை தடுக்க தாலுகா வாரியாக குழுக்கள் அமைப்பு
தேனி : மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்ட 33 இடங்கள 'பிளாக் ஸ்ட்பாட்' கருப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் விபத்துக்களை தடுக்க தாலுகா வாரியாக குழுக்களை அமைத்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் 2019-2021 வரை அதிக வாகன விபத்துக்கள் நடந்து வழக்குகள் பதிவான இடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் தாலுகா வாரியாக தேனி 7, போடி 5, உத்தமபாளையம் 3, ஆண்டிபட்டி 14, பெரியகுளம் 4 என மொத்தம் 33 இடங்கள் அதிக விபத்து பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இது தவிர மேலும் 130' ஹாட்ஸ்பாட்' பகுதிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. விபத்துக்களை தடுப்பது பற்றி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் சாலை விபத்து தடுப்பது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு துணைக் கலெக்டர் நிலையிலான அதிகாரி தலைமையில் போலீசார், மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை உள்ளடக்கி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுக்கள் விபத்துப்பகுதிகளில் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கு எவ்வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என ஆய்வு செய்யப்பட உள்ளது. நெடுஞ்சாலைகளில் ரிப்ளெக்டர்கள் இருப்பதை உறுதி செய்வது, வேகத்தடைகளுக்கு பதிலா புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தொடர் வேகத்தடைகள் அமைப்பது உள்ளிட்டவை பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.