உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலையடிவார கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் போலீஸ், வனத்துறை கூட்டு நடவடிக்கை அவசியம்

மலையடிவார கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் போலீஸ், வனத்துறை கூட்டு நடவடிக்கை அவசியம்

கம்பம்: மலையடிவார கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய போலீஸ் மற்றும் வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின்பு வனவிலங்கு வேட்டைகள் குறைந்து விட்டது. ஆனால் சமீபகாலமாக மீண்டும் வேட்டைகள் ஆரம்பமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஹைவேவிஸ் பகுதியில் காட்டு மாடு ஒன்று வேட்டையாடப்பட்டு அதன் இறைச்சி துண்டுகள் கிடந்துள்ளதை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதே போல காமயகவுண்டன்பட்டிக்கு கிழக்கு பகுதியில் யானை கெஜம் அருகே புலியின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கம்பம் மேற்கு சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மான் வேட்டைகள் கடந்த மாதம் நடந்தது. எனவே வேட்டைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு காமயகவுண்பட்டி மற்றும் ஓடைப்பட்டியில் நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கூடலூரில் வாங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறினர்.கம்பம் பள்ளத்தாக்கில் மலையடிவார கிராமங்களில் லைசென்ஸ் பெறாமல், அவ்வப்போது வேட்டைக்கு பயன்படுத்த நாட்டுத் துப்பாக்கிகளை சிலர் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மலையடிவார கிராமங்களில் மாவட்டம் முழுவதும் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து திடீர் சோதனை நடத்தி நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேட்டைகளை கட்டுப்படுத்துவது இயலாததாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி