தண்ணீர் வசதி இல்லாததால் பெண்கள் கழிப்பிடம் மூடல்: ஏத்தக்கோவில் ஊராட்சி பொதுமக்கள் தவிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஏத்தக்கோவில் ஊராட்சியில் தண்ணீர் வசதி இல்லாததால் பெண்கள் கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளது.இதனால் பெண்கள் மலையடிவார பகுதியை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்து அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஊராட்சியில் ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் 4000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கடைசி பகுதியில் உள்ள இக்கிராமத்திற்கு குடிநீர் சென்று சேர்வதில்லை. கடந்த பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை மட்டுமே அனைத்து தேவைக்கும் பயன்படுத்துகின்றனர்.ஜல் ஜீவன் திட்டத்திலும் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. கிராமங்களில் சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் வடிகால் நீர்வரத்து ஓடையில் குவியும் குப்பை கழிவுகளால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு அரசு கவனம் செலுத்தவில்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: சுத்தம் செய்யாத தண்ணீர் தொட்டி
பெருமாள், ஏத்தக்கோவில்: மலைப்பகுதியில் இருந்து வரும் வெள்ளப்பாறை ஓடை கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த ஓடை தூர்ரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஊரில் சேகரமாகும் மொத்த குப்பையையும் ஓடையில் பல இடங்களில் கொட்டுகின்றனர். குப்பையில் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள குளிக்கும் தொட்டியில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். குளியல் தொட்டி பல நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் அசுத்தமடைகிறது. மலைப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானை, கரடி, காட்டு பன்றிகளால் அடிக்கடி தொந்தரவு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறை நிவாரணம் கிடைக்கவில்லை. வன விலங்குகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஜல்ஜீவன் திட்டத்திலும் தண்ணீர் வரல
ரா.கருப்பன், ஏத்தக்கோவில்: 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆண், பெண்களுக்கு பொது கழிப்பறை வசதி இல்லை. மலையை ஒட்டியுள்ள கிராமத்தில் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சமுதாயக்கூடம் அருகே உள்ள பெண்கள் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியின்றி பூட்டி விட்டனர். அங்கன்வாடி மையம் அருகே இரவில் குடிமகன்களால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் இக்கிராமத்திற்கு குடிநீர் விரைந்து கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் கோயில் தெரு, ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள பொதுக்கிணறுகளுக்கு மேல் மூடி அமைத்து பாதுகாப்பு தர வேண்டும். ரேஷன் கடை தெற்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் தளத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை
மணிவேல், சித்தையகவுண்டன்பட்டி: பொதுக் கழிப்பறை தண்ணீர் வசதி, பராமரிப்பின்றி மூடப்பட்டதால் ரோட்டின் ஓரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக்கி சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி மேல் மூடி இடிந்து தொட்டிக்குள் விழுந்துள்ளது. இந்த தொட்டியை பல மாதமாக சுத்தம் செய்யவில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துகின்றனர். பலரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.குடிநீர் தொட்டியை சரி செய்ய இப்பகுதி மக்கள் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் தொட்டியை அதிகாரிகள் பார்வையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.