உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடிய விடிய பெய்த கனமழை கம்பம் பள்ளத்தாக்கை புரட்டி போட்டது

விடிய விடிய பெய்த கனமழை கம்பம் பள்ளத்தாக்கை புரட்டி போட்டது

நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் கம்பம் பள்ளத்தாக்கை துவம்சம் செய்தது. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியது. ரோட்டில் வெள்ள நீர் ஓடியதால் கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு துவங்கிய மழை கனமழையாக தீவிரமடைந்தது. மேகமலை, இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் இருந்தும், கம்பமெட்டு, மந்திப்பாறை ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள மலைக்குன்றுகளிலிருந்து வந்த காட்டாற்று வெள்ளமும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறிய நீரும் ஒன்று சேர்ந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. முல்லைப்பெரியாற்றில் கொள்ளளவை விட அதிக வெள்ளம் வந்ததால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. 20 ஊர்களில் குடிநீர் சப்ளை துண்டிப்பு முல்லைப் பெரியாற்றில் கம்பம், உத்தம பாளையம், சின்னமனூர், எல்லப்பட்டி, சீலையம்பட்டி ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறை கிணறுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. சின்னமனூர்- மார்க்கையன்கோட்டை ரோட்டில் வெள்ள நீர் நெல் வயல்களுக்குள் புகுந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தது. அதே போல் கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்தது. போக்குவரத்து தடை சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடுகிறது. சுருளிபட்டிக்கு செல்லும் ரோட்டில் தொட்டமான் துறை அருகில் சின்னவாய்க்கால் மற்றும் முல்லைப் பெரியாறு கரை உடைந்து ரோட்டில் வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கம்பம் மஞ்சக்குளம் பகுதியில் சின்ன வாய்க்கால் உடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது. நிரம்பிய சண்முகா நதி அணை ஏற்கெனவே 42 அடிக்கு மேல் இருந்த சண்முகா நதி அணை நேற்று பெய்த மழையால் தனது முழு கொள்ளளவான 52-.5 அடியை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால் வரட்டாறில் 200 கன அடி நீர் வெளியேறியது. வரட்டாறில் ஆக்கிரமிப்பால் காமயகவுண்டன்பட்டி பாலம் அருகே தடுப்பு சுவர் உடைந்து வாழை மரங்கள் சேதமடைந்தது. - சேத விபரங்களை உத்தமபாளையம் ஆர். டி. ஓ. செய்யது முகமது தலைமையில் வருவாய் துறையினர், வேளாண், தோட்டக்கலைத்துறைனர் மதிப்பீடு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் சேதம் கம்பம் விவசாய சங்க நிர்வாகிகள் சுகுமாறன், ராமகிருஷ்ணன், சின்னமனுார் விவசாய சங்க தலைவர் ராஜா ஆகியோர் கூறியதாவது: மஞ்சுக்குளம் கருப்பசாமி கோயில் சின்ன வாய்க்கல் உடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது. உத்தமுத்து வாய்க்கால் தலைமதகு சேதமடைந்துள்ளது. விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சின்னமனூர் சின்னவாய்க்கால், நத்தத்ததுமேடு, உறைகிணறு அருகில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதமடைந்தது. கரும்பு, வெற்றிலை கொடிக்கால்கள் சேதமடைந்துள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ